அவர் எம்.ஜி.ஆர்.இல்லை, என்.டி.ராமராவ் இல்லை. வேலையை ராஜினாமா செய்த அரசு அதிகாரி மட்டுமே. ஆனால் இவர்கள் செய்த ஒன்றை அவரும் செய்துகாட்டியிருக்கிறார். இந்திய ஜனநாயகத்தில் மட்டுமே இந்த உயிரோட்டமான நிகழ்வுகள் சாத்தியம். ஆம் ஆத்மி கட்சியை ஆரம்பித்த ஒரே ஆண்டுக்குள் சட்டமன்றத்தேர்தல். ஊழலை ஒழிப்போம் என்கிற ஒரே விஷயத்தை மையமாக வைத்துப் போட்டி. யாரும் எதிர்பார்க்காத அமோக வெற்றி. ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் இப்போதைக்கு காங்கிரஸ் ஆதரவுடன் புதுடெல்லியில் ஆட்சி நடத்தப்போவதாக அறிவித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லியில் கிடைத்த வெற்றியை நாடாளுமன்றத்துக்கும் விரிவாக்குவோம் என்பது ஆம் ஆத்மி கட்சியின் திட்டம். பல மாநிலங்களில் இளம் தொண்டர்கள் அந்த கட்சியில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். டெல்லியில் கிடைத்த வரவேற்பையும் வெற்றியையும் பிற இடங்களில் பெறமுடியுமா என்பதை இப்போதே சொல்லமுடியாது என்றாலும் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியுடன் ஒரு மாற்று அரசியலுக்கான பாதையைத் திறந்து வைத்திருக்கிறது என்பது உண்மை.
மூன்றுமுறை டெல்லியில் முதல்வராக இருந்த ஷீலா தீட்சித் தையே அவர் தொகுதியில் துணிச்சலாக நின்று 42,269 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரவிந்த் வெற்றிபெற்றார். அதுபோலவே அவரது கட்சியைச் சேர்ந்த இளம், அனுபவமில்லாத வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சியின் பெரிய பெரிய தலைவர்களை, அமைச்சர்களைத் தோற்கடித்தார்கள். அக்கட்சியின் சின்னம் மிகவும் எளிமையானது: துடைப்பம்.
அவர்களின் தேர்தல் பிரச்சாரம் பணத்தைக் கொட்டி நடத்தப் படவில்லை. அக்கட்சியின் சுறுசுறுப்பான சுமார் 4000 தொண்டர்களால் வீடுவீடாக, காலனி காலனியாகச் சென்று செய்த பிரச்சாரத்தால் நடத்தப்பட்டது. ஆட்டோ ரிக்ஷாக்களின் முதுகில் பேனர்கள் ஒட்டப்பட்டன. குறைந்த செலவில் எப்.எம்.சானல்களில் விளம்பரம் செய்தார்கள்.
ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற பெயரில் நடந்த மக்கள் இயக்கத்தின் நீட்சியே ஆம் ஆத்மி கட்சி. அந்த இயக்கத்துக்கு சாதாரண பொதுமக்களிடம் இருந்த ஆதரவுதான் இந்த அரசியல் வெற்றி.
ஆம் ஆத்மி கட்சி இடதுசாரியோ வலதுசாரியோ அல்ல. மிகவும் எளிமையாக நடுத்தர, சாமானிய ஏழை எளிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைமட்டுமே முன் வைத்தது. மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்தது. கெஜ்ரிவால் நேரடியாக ஒரு வீட்டுக்குச் சென்று துண்டிக்கப் பட்ட மின் இணைப்பை இணைத்து வைத்தார். குடிநீர்ப் பிரச்னைகளைப் பற்றிப் பேசியது. 700 லிட்டர் குடிநீரை ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாகத் தருவோம் என்பது அக்கட்சியின் தேர்தல் அறிவிப்பு.
ஊடகங்களை அக்கட்சி நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. கெஜ்ரிவால் செய்தியாளர்கள் அணுகுவதற்கு எளிமையானவராக இருந்தார். அவரது அரசியல் எதிரிகள் விலை உயர்ந்த கார்கள் வைத்திருந்த நிலையில் அவர் எளிமையான ஆல்டோ கார் ஓட்டினார். மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். சட்டையைக் கூட இன் பண்ணாமல், தலையில் வெள்ளைக் குல்லாவுடன் எளிமையிலும் எளிமையாகத் தோன்றினார்.
கட்சி நிதியைப் பொறுத்தவரை பணம் கொடுத்தவர்களுக்கு ரசீது, கட்சி இணைய தளத்தில் அவர்களின் பெயரை வெளியிடுதல் இரண்டையும் செய்தது மிக முக்கியமான அம்சமாகப் பார்க்கப்பட்டது.
காங்கிரசுக்கோ, பாஜகவுக்கோ ஒவ்வொரு தொகுதியிலும் வேலைபார்க்க ஆட்கள் இருந்தார்கள். அவர்களுக்கு தினப்படி செலவுக்கு பணம் தர துட்டும் இருந்தது. நம்மூரில் பிரியாணி, குவார்ட்டர் போல. ஆனால் ஆம் ஆத்மி கட்சிக்கு என்ன இருந்தது?
அவர்களுக்கு தன்னார்வத் தொண்டர்கள் கிடைத்தார்கள். ஒரு வாரத்துக்கு எவ்வளவு நேரம் கட்சிக்காக செலவிட முடியும் என்பதற்கு ஏற்ப அவர்கள் வகை பிரிக்கப்பட்டார்கள். மக்கள் கூட்டமாகக் கூடும் இடத்தில் இந்தத் தொண்டர்கள் நிற்பார்கள். அங்கிருந்து ஆர்வமுள்ள மக்களைச் சேர்த்து அவர்களின் தொலைபேசி எண்ணை, முகவரியை வாங்கிக் கொண்டு அவர்களையும் தொண்டர்களாகச் சேர்த்துக் கொள்வார்கள்.
அரவிந்த் நின்ற புதுடெல்லி தொகுதியில் மொத்தம் 23,000 வீடுகள். அதில் 18,000 வீடுகளுக்கு நேரடியாக அவரும் கட்சிக்காரர்களும் சென்று வாக்கு கேட்டார்கள். அதில் 13,000 வீடுகளைச் சேர்ந்தவர்கள் கட்சிக்கு நிதியும் அளித்தார்கள் என்கிறது ஓர் ஊடகத் தகவல்.
ஆனால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு இதெல்லாம் தெரிந்ததா என்று தெரியவில்லை. ஆம் ஆத்மி கட்சியா? யார் அர்விந்த் கெஜ்ரிவால்? போட்டியே எங்களுக்கும் பாஜகவுக்கும் தானே? என்று கேட்டார். பாவம்!
இந்த கட்சிக்கு எதிராகவும் எவ்வளவு சதிகள்? சில வேட்பாளர்கள் கணக்கில் காட்டாமல் தேர்தல் நிதி பெறத் தயார் என்று சொன்னதாக ஒரு வீடியோ ஒளிபரப்பானது. வேட்பாளர் நிறுத்த கெஜ்ரிவாலே பணம் கேட்டதாக ஒருவர் சொன்னார்.
அக்கட்சி நிறுத்திய ஒரு வேட்பாளர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு இருப்பதாக தேர்தலுக்கு சிலநாள் முன்பாகத் தெரியவந்தபோது, உடனே மன்னிப்புக் கேட்டதுடன் அந்த வேட்பாளருக்கான ஆதரவையும் கட்சி வாபஸ் பெற்றது. கிரிமினலாக இருப்பதுதான் வேட்பாளராக நிற்பதற்கான ஒரே தகுதி என்று கட்சிகள் பார்க்கும் நேரத்தில் இது வித்தியாசம்தானே? இதெல்லாம் சரி.. ஏன் தமிழ்நாட்டில் இதுபோன்ற அதிசயங்கள் நடப்பதில்லை என்று தோன்றுகிறதா?
நடந்தது. ஒன்று 1967-ல் அண்ணா தலைமையிலான திமுகவின் வெற்றி. கிட்டத்தட்ட அதுவும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்கிற மக்கள் இயக்கமாக நடந்த மாணவர் போராட்டத்தின் அறுவடை. அப்போது இப்போதிருக்கும் அளவுக்கு தகவல் தொடர்போ கல்வி அறிவோ இல்லை. ஒரே மக்கள் தொடர்புச் சாதனம் சினிமா தியேட்டர்தான். அதைத்தான் கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலியே எம்.ஜி.ராமச்சந்திரன் அறுவடை செய்தார்.
இவ்விரண்டு நிகழ்வுகளையும் தவிர பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்த்துத் தவறிப்போன இரண்டு தருணங்கள் உண்டு. அது 1994-ல் வைகோ உருவாக்கிய மதிமுக. 2005-ல் விஜயகாந்த்தின் தேமுதிக. இரண்டுமே தூய்மையான அரசியல் பேசியவைதான். இரு தலைவர்களுக்குமே பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு இருந்ததுதான். ஆனால் அர்விந்த் கெஜ்ரிவால் செய்த எதை இவர்கள் செய்யவில்லை? அல்லது டெல்லியைச் சேர்ந்த மக்களைப் போல் தமிழக மக்கள் இல்லை என்று பழியைப் போடலாமா?
“டெல்லியில் நடந்திருப்பது மிகப்பெரிய மக்கள் இயக்கத்தின் பின்னால் உருவான கட்சியின் வெற்றி. மதிமுகவும் சரி; தேமுதிகவும் சரி மக்கள் இயக்கத்தின் பின்னணியில் உருவாகவில்லை. வைகோ திமுக தலைமையால் வெளியேற்றப்பட்டார். அவருக்குப் பின்னால் மிகப்பெரிய இளைஞர் பட்டாளம் இருந்தது. விஜயகாந்த் அவரது கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டு நெருக்கடி கொடுக்கப் பட்ட நிலையில் தன் திரைப்பட செல்வாக்கைக் கொண்டு கட்சி தொடங்கினார். அவர் மீது ஏராளமான புதிய வாக்களர்கள் நம்பிக்கை வைத்தனர். இருவரிடமுமே கட்சிக்குள் ஜனநாயகத் தன்மையில் நம்பிக்கை இல்லை. பிற கட்சிகளின் வழக்கத்தையே பின்பற்றினார்கள்.
கட்சிச் செலவுக்காக பெறும் நிதியில் எந்த அளவுக்கும் வெளிப்படைத் தன்மை இல்லை. ஊடகங்களை பயன்படுத்துவதில் இருவருக்குமே தயக்கம் இருக்கிறது. சமூக ஊடகங்களை வைகோ ஓரளவுக்கு கவனிக்கிறார் என்றால் விஜயகாந்த் கட்சிக்கு அந்த கவலை கொஞ்சமும் இல்லை. தங்களுக்கு இருந்த ஆதரவைப் பெருக்கத் தவறிவிட்டார்கள்” என்கிறார் ஒரு மூத்த அரசியல் விமர்சகர். “இந்த இரு கட்சிகளும் திருதராஷ்டிர தழுவல் என்று மகாபாரதத்தில் வருமே அது போன்ற ஒன்றால் பாதிக்கப்பட்டன. அந்த தழுவல் எதிராளியை நொறுக்கிவிடும். அதிமுக, திமுக இரண்டுடன் கூட்டணி வைப்பது இந்த தழுவலுக்குச் சமம். இரு கட்சிகளும் வளராமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்” என்கிறார் இன்னொரு பெயர் வெளியிட விரும்பாத விமர்சகர். ஆகவே. அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றி என்கிற கண்ணாடியில் தமிழ்நாட்டைப் பார்த்ததில் இந்த சித்திரமே மிஞ்சுகிறது. பிற கட்சிகளைப் பார்க்க வேண்டுமானால் அதற்கு வேறொரு கண்ணாடி வேண்டும்!
ஜனவரி, 2014.